நட்பு எனப்படுவது யாதெனின்

நல்ல மனைவி மட்டுமல்ல நல்ல நட்பு அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். அதுவும் நாம் எத்தனை அடித்தாலும் தாங்கும் நட்பு கிடைக்க தவம் அல்லவா செய்து இருக்க வேண்டும். நானும் உஷாவும் இந்த விஷயத்தில் ஏதோ புண்ணியம்தான் செய்து இருக்கிறோம். இல்லாவிட்டால் வடிவுக்கரசி எங்களுக்கு தோழியாக கிடைப்பாளா என்ன? புரிகிறது நீங்கள் என்ன கேட்க நினைத்தீர்கள் என்று புரிகிறது. நீ யார்? உஷா யார் என்றே தெரியவில்லை. அதற்குள் வடிவு எங்கு வந்தாள் என்றுதானே கேட்கிறீர்கள்.

என்னைப் பற்றி விளக்கவும் வேண்டுமா? அதுதான் ஏறக்குறைய ஒன்பது மாதங்களாக உங்களை கொடுமை படுத்தி வருகிறேன் தானே? இனி எனக்கு என்ன தன்னிலை விளக்கம். உஷா என்னுடன் ஐந்தாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை தொடர்ந்து படித்தவள். ஏறக்குறைய என்னுடைய குணநலன்களை அப்படியே கொண்டவள். வடிவு ஒரு வருடம் தாமதமாக எங்களுடன் ஆறாம் வகுப்பில் இணைந்தவள். மிக மிக நல்லவள். உன்னுடைய நெருங்கிய தோழி என்கிறாய் அப்படி எப்படி நல்லவளாக இருக்க முடியும் என்று நீங்கள் உங்கள் மனதினில் நினைப்பது என் செவிகளில் கேட்கிறது. இதற்கு உதாரணம் காட்ட எனக்கு இந்த பழைய பழமொழியை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் எனக்கு வேறு பழமொழிகள் தெரியாது. ஒரு கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒன்று போலவா இருக்கிறது.

எனவே என்னையும் உஷாவையும் மட்டும் கவனத்தில் கொண்டு நீங்கள் வடிவை பற்றி தவறாக கணிக்க வேண்டாம். அவள் மிக மிக நல்லவள். எத்தனை அடித்தாலும் தாங்குபவள். உங்களின் உதட்டோர சிரிப்பிலிருந்து நீங்கள் இன்னும் நம்பவில்லை என்று தெரிகிறது. இரண்டே இரண்டு உதாரணங்கள் கூறுகிறேன். அதை மட்டுமாவது கேளுங்கள். அதன் பிறகு சொல்லுங்கள்.

உதாரணம் : 1
நாங்கள் இணைபிரியாத தோழிகளாய் இருந்தது எங்கள் பள்ளியில் பலரது கண்ணையும் உறுத்தியது போலும். நாங்கள் ஒன்பதாம் வகுப்பு சென்ற‌ போது வடிவு மட்டும் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டாள். நாங்கள் அ பிரிவும் அவள் இ பிரிவும் என நினைக்கிறேன். அது அவள் செய்த புண்ணியம் என்பது பாவம் அந்த அப்பாவிக்கு தெரியவில்லை. இரண்டு நாட்கள் அப்படி அழுதாள் நான் சொல்ல வந்த உதாரணம் இது அல்ல. இப்படி நாங்கள் ஒன்பதாம் வகுப்பு சென்று கொண்டிருந்த போது (நன்றாக கவனித்து கொள்ளுங்கள் படித்து கொண்டிருந்த போது அல்ல , இதிலிருந்தே எங்களின் படிப்பின் தரத்தை புரிந்து கொள்ளுங்கள்) வந்த காலாண்டு தேர்வு முடிந்த ஒரு வாரம் கழித்து ஒரு மதிய உணவு இடைவேளையின் போதுதான் இந்த உரையாடல் எங்களுக்குள் நடந்தது.

வடிவு : ஹேய் உங்க கிளாஸ்ல ரேங்க் கார்டு குடுத்துட்டாங்களா?

நான் : .........

உஷா : .........

வடிவு : ஏண்டி ரெண்டு பேரும் இப்படி முறைக்கிறீங்க நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?

நான் : நாம என்னிக்காவது ரேங்க் எடுத்து இருக்கோமா என்ன‌

உஷா : அப்புற‌ம் எப்ப‌டி அதை ரேங்க் கார்டுன்னு சொல்லுவே

வடிவு : (ஒரு நிமிட மவுனத்துக்கு பின்) சாரி சரி புரொக்கிராஸ் ரிப்போர்ட்னு சொல்லட்டுமா

உஷா : நீ என்னிக்காவ‌து ஃப‌ர்ஸ்ட் மிட் டெர்ம்ல‌ வாங்கின‌தை விட‌ குவாட்ட‌ர்லி எக்ஸாம்ல‌ அதிக‌ மார்க் வாங்கி இருக்கியா?

வ‌டிவு : இல்லை

நான் : எக்சாமுக்கு எக்சாம் சிலபஸ் ஜாஸ்தியாகிட்டே போறதுக்கு ஆப்போசிட்டா நம்ம மார்க்கு குறைஞ்சுட்டேதானே வருது.

வடிவு : ஆமாம்

உஷா : அப்புறம் எப்படி அதை புரொக்கிராஸ் ரிப்போர்ட் அப்படின்னு நாம சொல்ல முடியும்.


வடிவு : (கனத்த மெளனத்துக்கு பின் ) வேற எப்படிதான் சொல்லறது

நானும் உஷாவும் : மார்க் லிஸ்ட்ன்னு சொல்லி பழகு. அதை விட்டு கெட்ட வார்த்தை எல்லாம் பேசி எங்க நட்பை முறிச்சுக்காதே ஒ.கே.உதாரணம் : 2

அவள் செய்த பாவமோ நாங்கள் செய்த புண்ணியமோ பத்தாம் வகுப்பில் நாங்கள் மீண்டும் இணைந்துவிட்டோம். ஒரு நாள் சைலன்ஸ் ஹவரில் பேசிக்கொண்டு இருந்த பொழுது மரணம் பற்றிய பேச்சு வந்தது. நான் வடிவிடம் கேட்டேன்.

"நான் செத்தா நீ அழுவியா வடிவு

கண்டிப்பா அழுவேன் தாரணி ஏன் இப்படி எல்லாம் கேட்கிற‌

இல்ல நீ அழ மாட்டே வடிவு

இல்லை தாரணி என்னை நம்பு நான் அழுவேன்"

நான் மெதுவாய் அவளை பார்த்து பின் கேட்டேன்,

" நீ செத்தாலே நீ அழ மாட்டே அப்புறம் எப்படி நான் செத்தா நீ அழுவே"

அப்பொழுது அவள் கண்களில் ஜொலித்த திரவத்தின் பெயர் கண்ணீர் எனத்தான் நினைக்கிறேன்

..............

இன்னும் கூட‌ அவ‌ள் எங்கள் நெருங்கிய‌ தோழியாக‌தான் இருக்கிறாள். இப்பொழுதாவ‌து ந‌ம்புகிறீர்க‌ளா அவ‌ள் ந‌ல்ல‌வ‌ள் என்று.

-----

வடு


ஆடை மாற்றும்போதுதான்

அம்மா பார்த்தாள்

பெற்ற வயிறல்லவா

பற்றி பதை பதைக்க‌

என்னடி இது என்ற‌ அம்மாவுக்கு

எப்படி புரிய வெப்பேன்

வள்ளுவன் வாக்கை கடைபிடித்த‌

தமிழ் படித்த பதி குடும்பத்தை பற்றி

தீயினால் சுட்ட புண் உள் ஆறுமாம்

என்று திட்டாமல் வைத்த சூட்டை

எனக்கு பிடிச்ச பாட்டு

நான் கடவுள்

நான் வீட்டில இருந்தா எப்பவுமே ஏதாவது பாட்டு கேட்டுகிட்டேதான் இருப்பேன். எனக்கு பாட்டு கேக்கறதுன்னா அத்தனை பிடிக்கும். நான் பாட்டு கேக்கறதுக்கு ரெண்டே ரெண்டு காரணம்தான்.

1. எங்க வீட்டுல யாராவது ஒருத்தங்க எப்பவுமே என்னை திட்டி ஒரு சுப்ரபாதம் பாடிக்கிட்டு இருப்பாங்க. அந்த சுப்ரபாதம் என் காதுல விழக்கூடாதுன்னு பாட்டு கேக்க ஆரம்பிச்சு அது அப்படியே பழக்கமாகி போச்சு.

2. என்னால பாட்டு கேக்கதான் முடியும் பாட முடியாது. ஏன்னா என் குரல்வளம் அப்படி. பொதுவா நான் பேசும் போது நானே என் காதை பொத்திக்குவேன். என் குரலை சமயத்துல என்னாலேயே கேட்க முடியாது.நான் பேசினாலே கேட்க முடியாது இதுல பாடினா நாடு தாங்குமா? என் தம்பி கேட்பான், "எப்படி உனக்கு மட்டும் இப்படி ஒரு வினுசக்கரவர்த்தி வாய்ஸ்னு"? ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்ல முடியுமா என்ன? இப்படி உலக நன்மையை முன்னிட்டு பாட்டு கேக்கறதை மட்டும் வழக்கமா வெச்சு இருக்கேன்.

இந்த கதையெல்லாம் இப்ப எதுக்குன்னா நான் சமீபத்தில கேட்டுகிட்டு இருக்கற நான் கடவுள் படத்துல வர்ற ஒரு பாடல் பத்தி பகிர்ந்துக்கதான். ரொம்ப அவசியமுன்னு நீங்க முணுமுணுக்கறது என் காதுல விழுகுது. ஆனா நான் இதுக்கெல்லாம் அசரற ஆளா என்னா?

“பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்”, இதுதான் அந்த பாட்டு. ஏற்கனவே இது ரமணமாலையில ராஜா சாரே பாடி வந்த பாட்டுதான். வரிகளும் ராஜா சார்தான். இப்ப பாடத்துல மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கார். . மது பாலகிருஷ்ணன் உருகறார். உருக வைக்கிறார். இந்த பாட்டை இப்ப எத்தனை தரம் கேட்கறேன்னே தெரியலை. கேட்கும் போதெல்லாம் கண்கள் கலங்குது.

"அத்தனை செல்வமும் உன்னிடத்தில் –

நான் பிட்சைக்கு செல்வது எவ்விடத்தில்"

அப்படின்னு நம்மளையும் உருக வெக்கறார்.

"ஒருமுறையா இல்லை இருமுறையா

பல முறை பலப்பிறபெடுக்க வைத்தாய்

புது வினையா ? பழ வினையா ?

கனம் கனம் தினம் எனை துடிக்க வைத்தாய்"


நம்மளையும் இந்த கேள்வியை கேட்க வைக்கறார்.

என்னை பொருத்தவரை இந்த பாடல்ல இசையமைப்பாளர் இளையராஜாவை விட பாடலாசிரியர் ராஜாதான் ஜெயிச்சு இருக்கார். அந்த பாட்டு வரிகள் இதோ

பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே - என் ஐயனே - யாமொரு

பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே - என் ஐயனே

பிண்டம் எனும்

எழும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய

உடம்பு எனும் - பிட்சை பாத்திரம்..


அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை

ஆதியின் ஊழ்வினை வந்ததால்

இம்மையை நானறியாததால் - இந்த

பொம்மையின் நிலையெனில்

உண்மையை உணர்ந்திட - பிட்சை பாத்திரம்..


அத்தனை செல்வமும் உன்னிடத்தில் - நான்

பிட்சைக்கு செல்வது எவ்விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் - அதன்

சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒருமுறையா இல்லை இருமுறையா

பல முறை பலப்பிறபெடுக்க வைத்தாய்

புது வினையா ? பழ வினையா ?

கனம் கனம் தினம் எனை துடிக்க வைத்தாய்


பொருளுக்கு அலைந்திடும்

பொருளற்ற வாழ்க்கையும் துறத்துதே

அருள் அருள் அருள் என்று

அலைந்திடும் மனம் இன்று பிதற்றுதே


அருள் விழியால் நோக்குவாய்

மலர் பதத்தால் தாங்குவாய் - உன்

திருக்கரம் எனை அரவனைத்துனதருள் பெற –

பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் இந்த தலைப்புல தொடர்பதிவு எழுத சொல்லி திரு.முகுந்தன் அவங்க என்னையும் இணைச்சு இருக்காங்க. அவருக்கு ஒரு பெரிய நன்றி.

வழக்கொழிந்த சொற்கள் அப்படின்னா எதை சொல்லறதுன்னு ஒரு குழப்பம் வந்தது. ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால புழங்கிட்டு இருந்து இப்ப வழக்குல இல்லாத சொற்களை சொல்லறதா ? இல்லை என் பாட்டி உபயோகப்படுத்தின நிறைய சொற்களை நான் உபயோகிக்கறது இல்லை. அந்த மாதிரி சொற்களை சொல்லறதான்னு யோசிச்சு பார்த்துட்டு பழைய காலத்தை மட்டும் கணக்குல எடுத்துக்கலாமுன்னு முடிவு செஞ்சுடேனுங்க.

அஞ்சனம் - கண் மை


நாழிகை - நேரத்தை குறிப்பிட முன்னால உபயோகபடுத்த பட்ட சொல் ஒரு நாழிகைக்கு தோரயமா இன்னிக்கு கால அளவுல 24 நிமிடம் வரும்

கணையாழி - மோதிரம்

ஆலாட்சி மணி - காலத்தை அறிவிக்கும் மணி

கோதண்டம் - இது ஒரு பேர் மட்டும் இல்லைங்க.வில் அப்படின்னு அர்த்தம் அதுமட்டுமில்ல வில்லு போல வளைந்த இரும்பு சலாகையொன்று பெருந்தூண்களுக்கிடையே கட்டப்பட்டு அதன் இருமுனைகளிலும் தண்டனைக்குரியவன் கைகள் பிணைக்கபட்டு மன்னர் காலத்துல தண்டனை கைதிக்கு தண்டனை தருவாங்களாம்.அதுக்கு கோதண்டம் அப்படின்னுதான் பேர்(இந்த காலத்திலும் வில்லு தண்டனை தானே)

சலாகை - கம்பின்னு அர்த்தம்

உந்தி - தொப்புள்

பாகை - டிகிரி (நாம காலேஜ்ல வாங்கற டிகிரி இல்லைங்க. ஆங்கிள் போடும் போது உபயோகப்படுத்துவோம்தானே அது. இப்ப எல்லாம் 30 டிகிரி கோணத்தில் அப்படின்னுதான் சொல்லறாங்க :)

குழல், ஓரி, கேசம், கார், பங்கி - இத்தனைக்கும் முடி அப்படின்னுதான் அர்த்தம்.

இதுல மூணு பேரை இணைக்கணும். நான் ரம்யா, தமிழ்தினா, , அமித்து அம்மா மூணு பேரையும் அவங்ககிட்டு சம்மதம் கேட்காம இணைச்சுட்டேன். திட்டிட்டோ திட்டாமயோ சீக்கிரம் ஒரு பதிவை போடுங்கப்பா

கூட்டாஞ்சோறு

வலையுலக நண்பர்களே நலமா? பொங்கல் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? எனக்கு பொங்கல் ரொம்ப நல்ல படியா முடிஞ்சது. அதுக்கு காரணம் எனக்கு ரெண்டு இடத்துல பொங்கல். அதை விட முக்கியமான காரணம் ரெண்டு இடத்திலும் பொங்கல் நான் வெக்கலை. கோவையில அம்மாவும், சேலத்துல ரங்கமணி அண்ணியும் வெச்சாங்க. பொங்கல் அன்னிக்கே ரங்கமணி ஊருக்கு போக வேண்டியது. ஆனாலும் தங்கையோட தலை பொங்கலை முன்னிட்டு அடுத்த நாள்தான் சேலம் போனேன். மாட்டு பொண்ணா லட்சணமா மாமனார் வீட்டுல மாட்டு பொங்கலை கொண்டாடிட்டு காணும் பொங்கலுக்கு சாமிய பாக்கலாமுன்னு மேல்மருவத்தூர் போயிட்டு திரும்ப சேலம் வந்து அதுக்குபிறகு கோவை வந்து சேர்ந்தாச்சு.

* * * * * * * *

நானும் வில்லு பார்த்திடேனுங்க :(. எல்லாம் நரேன் செஞ்ச சதிதான். டிக்கெட் கிடைக்க கூடாதுன்னு வேண்டியும் கடவுள் எங்களை கைவிட்டுட்டார். குஷ்பூ டான்ஸ் ஆடகூடாதுன்னு யாராவது கேஸ் போட்டா தேவலை. நரேனுக்கு இன்னும் கதை எல்லாம் பெரிசா புரிய வாய்பில்லை. அதனால அவன் கமெண்ட். சூப்பர். கயல்தான் பாவம். எல்லாரையும் முறைச்சுகிட்டே உட்கார்ந்து இருந்தா. எனக்கு நீ கோப பட்டால் பாட்டு எடுக்கபட்ட விதம் பிடிஞ்சு இருந்தது,


* * * * * * * *

போன திங்கட்கிழமை வேலைக்கு போனது. அதுக்கு பிறகு இந்த திங்கட்கிழமைதான் திரும்ப ஆபிஸ் போனேன். ஒரு வாரம் லீவு ரொம்ப அதிகமோன்னு தோணுது. அதிலும் இந்த மாதத்துல எங்க கல்லூரி விடுமுறை நாட்களோட எண்ணிக்கை மொத்தமா 17 நாளு. லீவு வேணும்தான் ஆனா இது ரொம்ப அதிகமா இல்ல இருக்கு. இனிமேல தொடர்ந்து மூணு நாளைக்கு மேல லீவு வந்தா அந்த வாரத்துல வர்ற சனி ஞாயிறுகள்ல கண்டிப்பா வேலை செய்யணுமின்னு சட்டம் வந்தா பரவாயில்லைன்னு தோணுது.

* * * * * * * *

வாழ்த்துக்கள்எல்லாருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

பிறக்கும் தமிழ் புத்தாண்டில் வளமாய், செழிப்பாய் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்

செல்லங்களுக்காக ஒரு பதிவுநண்பர் குடுகுடுப்பையார் ஒரு புது பட்டாம்பூச்சி விருது தந்து இருக்கார். இது பழைய பட்டாம்பூச்சியை விட கலர்புல். ஏன்னா இந்த விருது எனக்கானது இல்லை. மேல இருக்கற ரெண்டு செல்லமே செல்லம்ஸ்காக. நம்ம குழந்தைங்ககிட்ட இருக்கிற தனிதன்மையை ஊக்குவிக்க இந்த விருதுன்னு நல்ல ஒரு விசயத்தை ஆரம்பிச்சு வச்சு இருக்கார். நன்றி குடுகுடுப்பையாரே.

இவங்க பேர் கயல் & நரேன். என் ரங்கமணியோட அண்ணன் பசங்க. எங்க வீட்டை பொருத்த வரை கயல் எனக்கு ரெண்டு நாள் மூத்தவ. நிஜமாதாங்க. என் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னால பிறந்தவ. நல்லா பாடுவா,வரைவா. பொறுமைசாலி.

அப்புறம் நரேன் பேருக்கேத்த மாதிரி அய்யா எப்பவுமே வேகம்தான். தீவிர விஜய் ரசிகன். அதனால எப்ப பார்த்தாலும் வீட்டுல டான்ஸ் ஆடிக்கிட்டேதான் இருப்பான். இவன்கிட்ட இருக்கிற தனிதன்மை தனக்கு சரிப்பட்டு வராதுன்னு எதையுமே ஒதுக்க மாட்டான். எல்லாத்தையும் முயற்சி செஞ்சு பார்ப்பான். சப்போஸ் சரியா வரலைன்னா , “அடுத்த தடவை சரியா வரும் பாரு சித்தி”ன்னு அவன் சொல்லறதை பார்க்கறதே அத்தனை அழகு.

எங்க வீட்டுல படி படின்னு எப்பவும் தொந்தரவு செய்யறது இல்லை. அதனால கிரேடு எல்லாம் O, A+ இப்படி அப்பப்ப மாறும்.

எல்லாத்துக்கும் மேல போன வருசம் அவங்க ஸ்கூல் பங்கஷன்ல, "உங்க வீட்டுல உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச ஆள் யாருன்னு கேட்ட கேள்விக்கு சித்தின்னு ரெண்டு பேருமே பதில் சொல்லி என்னை அழ வெச்ச வாலுங்க.

இந்த விருதுக்கு கயல் மற்றும் நரேன் சார்பா நன்றிகள். விருது பத்திரமா வெச்சு இருந்து பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது வழங்கப்படும்.

இப்ப நானும் பட்டாம்பூச்சிதான்அட எனக்கும் விருது கிடைச்சு இருக்குங்க.அதுவும் ரெண்டு தடவை. என்னால என்னையே நம்ப முடியலை. கனகு அப்புறம் அருணா மேடம் ரெண்டு பேர் தந்து இருக்காங்க. சந்தோசமா இருக்கு. ஒரு விருது 2008லயும் இன்னொமுன்னு 2009 லயும் கிடைச்சு இருக்கு. 2010லயும் யாரவது ஒரு விருது குடுத்துருங்க. ஹாட்டிரிக் அடிக்கலாமின்னு ஒரு ஆசை அவ்வளவுதான் (அப்ப 2010லயும் நீ ப்ளாக் எழுதறதை நிறுத்த மாட்டயான்னு யாரோ கேட்கறது என் காதுல விழுகுது. ஹீம் முயற்சி செஞ்சு பார்க்கிறேன்)

இதை மூணு பேருக்கு பிரிச்சு தர சொல்லியிருக்காங்க. நான் முதல் தடவை கிடைச்சப்ப ஒரு மூணு பேரை செலக்ட் செஞ்சேன். அதுக்குள்ள அவங்களுக்கு வேறவங்க குடுத்துட்டாங்க. இப்படியே யாருக்கு தரதுன்னு யோசிச்சிகிட்டே இருந்ததுல ரெண்டாவது தடவையும் வாங்கியாச்சு. இனிமேலயும் இதை வேற யாருக்காவது பாஸ் செய்யலைன்னா நல்லா இல்லைன்னு முடிவு செஞ்சு இதோ இந்த மூணு பேருக்கு தரேன். (நான் எல்லாம் விருது வாங்குனதே பெரிசு. இதுல என்னை போய் தர எல்லாம் சொல்லி ஊம். ஆனந்த கண்ணீர் எல்லாம் வருது)

பிரியமுடன் பிரபு கலக்கற கவிதைகளுக்கு சொந்தக்காரர். அனேகமா கொஞ்ச நாளுல சினிமா பாட்டு எழுதுவார்னு நினைக்கிறேன்.

ஹரிணி அம்மா அழகான புகைப்படங்களும் அதைவிட அழகான கவிதை வரிகளுமுன்னு கலக்கறவங்க. .எதுவோ ஆக நினைத்து எதுவோ ஆனவள்... ..எதுவானாலும் சந்தோஷமானவள் இதுதான் இவங்க புரொபைல் வரிங்க. எல்லா பொண்ணுகளுக்கும் பொருத்தமான வரிகள்

ஜீவன் என்னை ரொம்ப பாதிச்ச எழுத்துகளுக்கு சொந்தக்காரர். நான் இவருக்கு இது வரை ஒரு பின்னூட்டம் கூட போட்டதில்லை. படிச்சுட்டு திரும்ப அந்த வரிகளை நினைச்சுகிட்டே இருக்குதான் தோணுமே தவிர வேற எதுவுமே தோணாது.இவருடைய தொலைத்த தோழமைகள் எனக்கு ரொம்பவே பிடிச்ச பதிவு.

நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இந்த படத்தை உங்க ப்ளாக்ல போடுங்க. இதே மாதிரி உங்களுக்கு பிடிச்ச மூணு பேருக்கு இதை பகிர்ந்து கொடுங்க

என்னையும் ஒரு ப்ளாக்கரா நினைச்சு எனக்கும் விருது எல்லாம் தந்த கனகுக்கும் அருணா மேடம் அவங்களுக்கு ரொம்ப நன்றி.

அஷ்டே அஷ்டு.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம்

2008 முடிந்து 2009 ஆரம்பமாகிவிட்டது. 2008 ஆரம்பிக்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட முடியும்போது நிறையவே மகிழ்ச்சியை தந்து சென்றுள்ளது. 2008 என்ற வருடத்தை மறக்க முடியாதபடி சொந்த வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் நிறையவே மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்தன. முக்கியமான விஷயம் இந்த வலையுலகம். இதனால் கிடைத்த நண்பர்கள். அதிலும் நிறைய பேர் "என்ன தவம் செய்தேனோ" என்று பாடக்கூடிய அளவுக்கு அற்புதமானவர்கள். இங்கு கிடைதத அக்கா, அண்ணா, தம்பி, தங்கைகள் என் உறவு வட்டாரத்தை பெருக்கி என்னுடைய மகிழ்ச்சியில், சோகத்தில் பங்கு கொண்டு என் வாழ்க்கையை இன்னும் அழகாக்கி இருக்கிறீர்கள்.

நன்றி நண்பர்களே.

2008 போலவே 2009ம் அதிகபட்ச மகிழ்ச்சிகளை எல்லோருக்கும் தர வாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

--